ஸ்ரீ தேவி கருமாரி அன்னையின் ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழாவின் சிறப்பு
சிவபெருமானுக்குத் திருவாதிரையும் , திருமாலுக்கு திருவோணமும் போல அம்பிகைக்கு உரிய சிறப்புத் திருநாள் பூரம் ஆகும். ஆமாம் ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உரிய மாதமாக கொள்ளப்படுகின்றது .அனைத்து ஆலயங்களிலும் அம்மனுக்கு விஷேட பூஜை நடை பெறுவதுண்டு . இத்தோடு ஆடி மாதத்தில் கூழ் மற்றும் கொழுக்கட்டை போன்ற பண்டங்களை வீட்டில் செய்து உண்டு மகிழ்வர் . இவ் ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு ஆடிச்சுவாதி , ஆடிக்கிருதிகை, ஆடிப்பூரம் , நாகபஞ்சமி , வரலட்சுமி விரதம் , ஹயக்ரீவ அவதாரம் என்பன முக்கிய நிகழ்வுகளாக காணப்படும் அதில் ஆடிப்பூரம் மிக விஷேடமானது . அம்மன் ருதுவான நிகழ்வு என்பதால் இவ் ஆடிப்பூரம் முக்கிய இடம் வகிக்கின்றது . இவ்வாறான சிறப்பு பொருந்திய ஆடிப்பூரம் அன்னை கருமாரி தேவியின் ஆலயத்தில் மாபெரும் திருவிழாவாகக் கொள்ளப்படும் என்றால் அது மிகையாகாது.
ஆமாம் , ஆடிமாதம் பிறந்த முதல் நாள் தொடக்கம் அன்னையின் ஆலயத்தில் வேப்பங்குருத்துகள் தோரணங்களாகவும் ஆடிக்கூழ் விருந்தாகவும் காணப்படும் . இவ்வாறு ஆடி மாதம் ஆடிப்பூர நன் நாளை நோக்கிச்செல்லும் . ஆடிப்பூரத்தன்றே இங்கு பால்குட பவனி நடைபெறும் .
திருப்பாற்குட பவனியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் தமது வேண்டுதல்களை மனதிற்கொண்டு ஆலயத்தில் காப்புக்கட்டி விரதம் இருப்பர் குறித்த ஆடிப்பூரத்தன்று கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை பொழுதிலிருந்து பக்தர்கள் பால்குடங்களை தமது சிரமேற் சுமந்த வண்ணம் வரிசைக்கிரமமாக நிற்பர் . அதுமட்டுமல்லாது தமது வேண்டுதல்களை நிவர்த்தி செய்யும் முகமாக பறவைக்காவடி , அலகு குத்துதல் , தீச்சட்டி , வேப்பிலையாடை , காவடி என பக்தர்கள் பக்தியில் மெய்மறந்து நிற்பர் . இவ் நேர்த்திக்கடன்கள் மூலம் அன்னை கருமாரி தேவியின் அற்புதங்கள் புலனாகின்றன . இங்கு இப்பாற்குட பவனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையே ஆச்சரியத்தக்க உண்மை . ஆலயத்தின் கர்த்தாவாகிய கருமாரி சித்தர் ஸ்ரீ ரெங்கதாஸ் சுவாமியின் காலத்தில் சுவாமிகள் ஆரம்பித்த இப் பவனி இன்று வெகு விமர்சையாகவே காணப்படுகின்றது .உள்நாட்டவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் ஒவ்வொரு வருடமும் எவ்வாறாயினும் தமது கரங்களால் அன்னைக்குப் பாலாபிஷேகம் செய்ய வேண்டுமென்ற ஆவலுடன் அன்னையை நாடி வருகின்றனர். அடுத்ததாக இங்கு பாற்குடத்திற்கு கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது என்பது ஓர் சிறப்பம்சமே.
குறித்த வேளையில் தேவி கருமாரி அன்னையின் அருளுடனும் ஸ்ரீ ரெங்கதாஸ் சுவாமிகளின் ஆசியுடனும் ஸ்ரீ விஜயானந்த் சுவாமிகளின் வழிநடத்தலும் பாற்குட பவனி ஆலயத்தை நோக்கி புறப்படும் . செல்லும் வழியெல்லாம் ” ஓம் சக்தி ” கோஷம் ஒலித்த வண்ணம் பக்தர்கள் வெள்ளம் போல செல்வர் . நாதஸ்வர மேள இசை நயத்துடன் பாற்குடபவனி ஆலயத்தை வந்தடையும் . சிறுவர் முதற்கொண்டு அனைத்து பக்தர்களும் அன்னையின் திருமுகத்தை காண ஆவலுடன் ஆலய முன்றலில் காத்திருப்பர் . தமது துயரங்களை கண்களின் கண்ணீர் மூலம் வெளிக்கொணர்ந்து தமது கரங்களால் தேவி கருமாரி அன்னைக்கு மனதாரப் பாலாபிஷேகம் செய்து அதன்பின் அன்னதானமும் அன்னையின் திருவருட் பிரசாதமாகப் பெற்றுச் செல்வர் .
அவ்வாறு அந்நாளின் சாயங்காலப் பூசையாக அன்னை கருமாரி தேவிக்கு ருதுசாந்தி செய்யப்படும் . சீர்வரிசைகள் விஷ்ணு ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டு ஊஞ்சலில் வீற்றிருக்கும் அன்னைக்கு ஆராத்தி செய்வர். இதற்கும் பக்தர்கள் பலர் கலந்து கொள்வர். இவ்வாறு அன்னையின் பாற்குட பவனி சிறப்பாக நிறைவேறும் .