அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அன்னையின் அருட்சிறப்பு

இயற்கையையே இயைபாகக் கொண்டு விளங்கும் நாடாம், சீதோசன நிலையில் சீராய் விளங்கும் வியத்தகு நாடாம், நாற்பக்கமும் கடலால் சூழ்ந்த நவரத்தினம் போல் விளங்கும் அழகிய நாடாம் எனப் பல வர்ணனைகளைக் கொண்டுள்ள இலங்கை மணித்திருநாட்டில் தலைநகராம் கொழும்பில் தலைமுறை தவறாமல் தனித்துவமாய் தன்னிகரில்லா அருளாட்சி புரிகின்றாள் ஸ்ரீ கதிரேசன்பதி அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியன்னை. ஆமாம் இன்று ஆறாம் தலைமுறையாக அன்னை தன் அருளை பக்த கோடிகளுக்கு வழங்குகின்றாள்.

நாற்திசைகளிலும் வியாபித்திருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி தேவியின் அருட்புகழ், அன்னையால் ஆட்கொள்ளப்பட்ட ஸ்ரீ ரெங்கதாஸ் சுவாமிகளின் இல்லத்திலிருந்தே தோற்றம் பெற்றது. உண்ண உணவின்றி வாழ்வில் பல இன்னல்களை முகங்கொடுத்துத் தனது இல்லறவாழ்க்கையை இக்குடிலிலே ஆரம்பித்தார் ஸ்ரீ ரெங்கதாஸ் சுவாமிகள். அன்னையின் அருளோடு ஆன்மீகப்பாதையில் பயணித்தார். அன்னைக்கு 108 படிகள் கொண்ட 5 மாடி கட்டடங்கள் கொண்ட ஆலயம் அமைத்து அதில் அன்னையைப் பூஜிக்க வேண்டும் எனும் சுவாமிகளது கனவை நனவாக்கும் பொருட்டு சுவாமிகளது மகனான விஜயானந்த் சுவாமிகள் இன்று தொடர்கிறார் .

இங்கு அன்னையின் ஒவ்வொரு நிகழ்வும் வெவ்வேறு சிறப்புகளையும் காரணங்களையும் கொண்டே விளங்குகின்றன. பூசைகள், விழாக்கள், மற்றும் விரதங்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன. அன்னதானங்கள், அற்புதங்கள், மற்றும் அருளாசி என வேண்டுவோர் வேண்டமுதல் வேண்டிய வரங்களை அருள்கிறாள் அன்னை. பக்தர்கள் அன்னையை தமது தாயாக எண்ணித் துன்பங்களை அவளிடம் கூறிச் செல்கின்றனர். இங்கு “ நம்பிக்கை யுடன் வா கருமாரி கைகொடுப்பாள் “ எனும் சுவாமிகளது திருவாக்கிற்கு இணங்கவே அன்னையும் பக்தர்களை அரவணைத்து காத்து வருகிறாள் .

இப்பிரபஞ்சத்தைப் படைத்த லோகநாயகி தன் அருட்சிறப்பைத் தன்னை நாடி வரும் பக்தர்கள் மூலமே உலகறியச் செய்கிறாள் என்றால் அது மிகையாகாது . தனது அலங்காரக் கோலத்தால் பக்தர்களின் மனதைத் தன்வயப்படுத்தி தன் அற்புத அருட்சிறப்பை அழகாக அரங்கேற்றுகிறாள்.