ஆலயத்தின் ஆரம்ப நிலை

அன்னையின் அடியார்களே!

இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையை வணங்கி செல்லும் இவ்வாலயம் 40 வருடங்களுக்கு முன்னால் தவத்திரு கருமாரி சித்தர் ஸ்ரீ ரெங்தாஸ் சுவாமிகள் வாழ்ந்த இல்லம் ஆகும். சுவாமிகள் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு நாஸ்திகனாகவே வாழ்ந்தார். அவரின் குடும்பத்தாரோ அன்னையின் மீது அளவில்லாத பக்தி கொண்டவர்கள் சுவாமிகள் தன்னுடைய தாயை தவிர வேறு தெய்வம் இல்லை என்ற கருத்தைக் கொண்டவர். எனினும் தன்னுடைய தாயின் மறைவுக்குப் பின்னால் சுவாமிகள் ஆஸ்திகத்தை உணரத் தொடங்கினார் அன்னை கருமாரி அவரை ஆட்கொண்டு அவர் மூலம் பல பக்தர்களின் இன்னல்களை தீர்த்து வந்தாள். சுவாமிகள் தனது இல்லத்தில் அன்னையின் திருவுருவப் படத்தை வைத்து வணங்கி வந்தார். பக்தர்களின் வருகையும் அதிகரித்தது இவ்வில்லத்தில் முதன் முதலாக மண்ணால் செய்யப்பட்ட அன்னையின் திருவுருவ சிலையை சுவாமிகள் அமர்த்தினார். அன்னை “நான் இங்கு இருக்கின்றேன்” என்று அச்சிலையின் மூலம் பல அற்புதங்களை பக்தர்களுக்கு நிகழ்த்தினாள்.

சிறிது சிறிதாக சுவாமிகள் இல்லத்தை ஆலயமாக வளர்த்து வந்தார். அன்னாயும் சுவாமிகள் மூலம் பல அற்புதங்களை செய்ய மேலும் மேலும் தொடங்கினாள். சுவாமிகள் இலங்கை திருநாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவி உலக மக்கள் எல்லோரும் சுபீட்சமாக வாழ வேண்டுமென்று வீதியில் அங்கப்பிரதச்சனம் செய்து இருக்கின்றார். பெயர்,புகழ்,பொருள் என்பன விரும்பாத சுவாமிகள் அன்னையை நம்பி வரும் பக்தர்களின் சேவைக்காகவே வாழ்ந்து வந்த போற்ற தக்க மகான் ஆவார். அத்தோடு சுவாமிகளின் எண்ணம் எதிர்காலத்தில் இவ்வாலயம் 108 படியாக அமைக்க வேண்டும் என்பதே அதன்மூலம் மக்களுக்கு பல சேவைகளை செய்ய வேண்டும் என்பதே சுவாமிகளின் கனவாகும்.

2003-12-24 அன்று சுவாமிகள் அன்னையின் திருப்பாதத்தை அடைந்தார். ஆனாலும் இவ்வாலயம் வரும் பக்தர்களின் உள்ளத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். சுவாமிகளின் எண்ணம் இன்றும் அழியாது, அவர்களின் ஆசியோடு சுவாமிகளின் மகனான விஜயானந்த் சுவாமிகள் மூலம் நடைபெறுகிறது என்பது போற்றத்தக்கது.