தல வரலாறு

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையை வணங்கி செல்லும் இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயமானது, 50 வருடங்களுக்கு முன்னால் கருமாரி சித்தர் ஸ்ரீ ரெங்கதாஸ் சுவாமிகள் வாழ்ந்த இல்லமாகும். தன்னுடைய தாயைத் தவிர வேறு தெய்வம் இல்லை என ஆரம்ப முதலே இவர் நாஸ்திகராக இருந்த போதிலும், அவரது குடும்பத்தினர் அனைவரும் அன்னையின் மீது அளவில்லாத பக்தி கொண்டவர்களாக இருந்தனர். தன்னுடைய தாயின் மறைவிற்கு பின், ரெங்கதாஸ் சுவாமிகள் ஆஸ்திகத்தை உணர துவங்கினார். அன்னை கருமாரியும் அவரை ஆட்கொண்டு, அவர் மூலம் பல பக்தர்களின் இன்னல்களை தீர்த்து வந்தாள். இதனால் தனது இல்லத்தில் அன்னையில் திரவுருவப்படத்தை வைத்து வணங்கி வந்தார். இதனால் பக்தர்களின் வருகையும் அதிகரித்தது. இவ்விலத்தில் முதன் முறையாக மண்ணால் செய்யப்பட்ட அன்னையின் திருவுருவ சிலையை சுவாமிகள் நிர்மானித்தார். நான் இங்கு இருக்கின்றேன் என்று அச்சிலையின் மூலம் பல அற்புதங்களை பக்தர்களுக்கு நிகழ்த்தி காட்டினாள். இவ்வாறு சிறிது சிறிதாக இவ்வாலயம் வளர்ந்து வந்தது.

2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரெங்கதாஸ் சுவாமிகளின் மறைவிற்கு பின் அவரது மகன் விஜயானந்த் சுவாமிகள் இவ்வாலய நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறார். பக்தர்களின் வாழ்வில் அன்னை கருமாரி நிகழ்த்தி வரும் அற்புதங்களின் காரணமாக இவ்வாலயத்தில் நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. அன்னையை நம்பி வரும் பக்தர்கள், தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்தி வைக்கிறார்கள். அவர்களின் வேண்டுதல்களை குறுகிய காலத்திலேயே அன்னை நிறைவேற்றி வைக்கிறாள். இதன் காரணமாக பக்தர்கள் பல உதவிகளை ஆலய வளர்ச்சிக்காக செய்து வருகின்றனர். இவ்வாலயம் சார்பில் பல சமூக பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகளும், பாட புத்தகங்களும், மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகளும் செய்யப்பட்டு வருகின்றன.